ethiri.com

யுத்தத்தினால் சேதமடைந்த குளங்களை புனரமைக்குக!பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா வலியுறுத்து …………….

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சிறு சிறு குளங்கள் கடந்த யுத்த காலத்தில் சேதமாக்கப்பட்டதுடன் இதனால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே, சேதமடைந்துள்ள குளங்களை புனரமைத்து, விவசாயிகளுக்குத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயம் செய்வதற்கு சில அதிகாரிகள், திணைக்களங்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் இதற்கு உடனடியாக தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிமை இடம்பெற்ற மகாவலி அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட நான்கு அமைச்சுக்களுக்கான வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மகாவலி அபிவிருத்தி அமைச்சு மீண்டும் புத்துயிர் பெற்று அவ்வமைச்சு ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகின்றமை தொடர்பில் அவர்களுக்கு நாங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் அவ்வமைச்சு காத்திரமாக செயற்படுகின்றமை வரவேற்கத்தக்கது.
மகாவலி திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்யப்படாமல் இருந்த வடமுனைத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கான நிதியை இம்முறை வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இதனை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சார்பில் நாங்கள் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக எமது மாவட்டத்தில் விவசாயத்துறை அபிவிருத்தியடைந்து பொருளாதாரம் முன்னேற்றமடையும். வறுமையின் கீழ் இயங்கும் எமது மாவட்டத்தை கட்டியெழுப்புவதற்கு இத்திட்டம் மிகவும் சாதகமாக அமையும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இதேவேளை, மகாவலி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் ஊடாக ஏராளமான சிறு சிறு குளங்கள் நிர்மாணிக்கப்பட்டன. எனினும், கடந்த கால யுத்த சூழல் காரணமாக அவை பாரியளவில் சேதமடைந்ததுடன் இதுவரைக் காலம் அவை புனரமைக்கப்படவும் இல்லை.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மக்கள் அங்கு விவசாயம் செய்யாத காரணத்தினால் குளங்களின் தேவைப்பாடு இருக்கவில்லை. எனினும், தற்போது மக்கள் தமது சொந்த இடங்களில் விவாசம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் குளங்களின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது. ஜயந்தியாய, ரிதிதென்ன, எசலபுற போன்ற பிரதேசங்களில் மக்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டாலும் அவை பூரணப்படுத்தப்படவில்லை. எனவே, மட்டு மாவட்டத்திலுள்ள சேதமடைந்த குளங்களை புனரமைப்பதற்கான விசேட திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும்.
மட்டகளப்பு மாவட்டம் யுத்தத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம். இங்கு பயிர்செய்யப்படும் வேலாண்மைகளில் 90 வீதமானவை ஒருவருடத்தில் ஒருதடவையே மேற்கொள்ளப்படுகின்றது. ஏனைய 9 மாதங்களும் அங்கு எவ்வித பயிர்ச்செய்கையும் செய்யப்படுவதில்லை. நாங்கள் புராதன வழிகளை பயன்படுத்துவதனாலேயே இந்நிலை உருவாகியுள்ளது. எனவே, நவீன விவசாய முறைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதுடன், அது தொடர்பில் விவசாயிகளுக்கு தெளிவூட்டல்களையும் – வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மட்டு மாவட்டத்தில் உள்ள ரூகம் குளத்தை விஸ்தரித்து புனரமைத்துக் கொடுக்குமாறு நாங்கள் நீண்டநாட்களாக கோரிக்கைவிடுத்து வந்தோம். அதனை நீர்;ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தனது அமைச்சின் ஊடாக விஸ்தரிப்பதற்கான பாரிய திட்டமொன்றை வகுத்து இம்முறை வரவு செலவு திட்டத்தின் மூலம் அதற்கான நிதியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதேபோன்று, பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தனது அமைச்சின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை பாரிய சவால்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருகின்றார். தங்களது அமைச்சின் சில திணைக்களங்கள் ஊடாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தென்னை உள்ளிட்ட பெருந்தோட்ட பயிர்செய்கைகளை முன்னேற்றுவதற்கு தேவையான வசதிவாய்ப்புக்களை செய்து கொடுக்க வேண்டும்
அம்பாரை மாவட்டத்தில் குறிப்பாக விவசாயம் செய்யப்பட்டு வந்த பல விவசாய காணிகளில் யுத்தம் காரணமாக பல ஆண்டுகள் விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை. தற்போதுள்ள நிலையில் அந்நிலங்களில் மீண்டும் விவசாயம் மேற்கொள்ள மக்கள் செல்லும் போது பல இடையூறுகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். பொத்துவில் சம்மாந்துறை போன்ற பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் ஏராளம் பதிவாகியுள்ளன. எனவே, இவ்விடயத்தில் விவசாய அமைச்சர் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் – என்றார்.  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post