ethiri.com

மலச்சிக்கல் ஏற்படுவது எதனால் தெரியுமா ..?

மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக் கொள்வது போன்ற நிலைமையை ‘மலச்சிக்கல்’ என்று அழைக்கிறோம். இதற்கான தீர்வை பார்க்கலாம்.

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் – தீர்வும்
தினமும் காலையில் எழுந்ததும் மலம் கழித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. மலம் காலையில் வரலாம். மாலையில் வரலாம். இரவிலும் வரலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை வரலாம். இருமுறை வரலாம். எதுவும் தப்பில்லை.

ethiri.com

வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது. மலம் இறுகிப்போவது. மலம் கழிப்பதில் சிக்கல். மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு,

மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக் கொள்வது போன்ற நிலைமைகளை ‘மலச்சிக்கல்’ என்று அழைக்கிறோம். மருத்துவ மொழியில் சொன்னால் ஒருவருக்கு வாரத்துக்கு மூன்று முறைக்குக் குறைவாக மலம் போவது ‘மலச்சிக்கல்’.

மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது,

பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது. நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது. தண்ணீர் குறைவாகக் குடிப்பது.

காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.

அடுத்து, தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். குறிப்பாக, மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது,

பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படும்.

பொதுவாகவே வயது ஆகஆக மலம் போவது குறையும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது மலச்சிக்கலுக்கு வழிவிடும்.

மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.

கர்ப்ப காலத்தில் மசக்கை காரணமாக தண்ணீர் அதிகமாகக் குடிக்காமல் இருப்பது, கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், ஆசனவாய் சுருங்குதல் ஆகிய காரணங்களால் கர்ப்பிணிகளுக்குத் தற்காலிகமாக மலச்சிக்கல் உண்டாகலாம்.

வேறு உடல் பிரச்சினைகளுக்காக நாம் சாப்பிடும் மருந்துகளும் மலச்சிக்கலுக்குக் காரணமாகலாம். எடுத்துக்காட்டாக, வயிற்றுப் புண்ணுக்குச் சாப்பிடப்படும் ‘அலுமினியம்’, ‘கால்சியம்’ கலந்துள்ள ‘ஆன்டாசிட்’ மருந்துகள்,

இரும்புச்சத்து மாத்திரைகள், வயிற்றுவலி மாத்திரைகள், வலிப்பு மருந்துகள், மன அழுத்த மருந்துகள், ‘ஓபியம்’ கலந்த வலிநிவாரணிகள் மலச்சிக்கலை ஏற்படுத்துகிற மருந்துகளில் முக்கியமானவை.

இன்னொன்று, மலச்சிக்கலைப் போக்குவதற்காக பேதி மாத்திரைகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், அந்த பேதி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டாலும் மலச்சிக்கல் உண்டாகும்.

வயதுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாதது, முதுமையின் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோ படுக்கையில் நீண்டகாலம் படுத்தே இருப்பது போன்றவையும் மலச்சிக்கலை வரவேற்பதுண்டு.

மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் ஆசனவாயில் விரிசல் ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டாகும். அஜீரணம், வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம், குடலிறக்கம், குடல் அடைப்பு, சிறுநீர் அடைப்பு, நெஞ்சுவலி, மயக்கம் ஏற்படலாம்.

மலச்சிக்கலுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், நிரந்தரமாகக் குணப்படுத்தலாம். இப்போது மலச்சிக்கலுக்குப் பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் கிடைக்கின்றன.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வேலை செய்கிறது. வயதைப் பொறுத்து, அடிப்படை நோயைப் பொறுத்து, மலச்சிக்கலின் தன்மையைப் பொறுத்து மருந்து தேவைப்படும். ஆகவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிடுங்கள்.

மலச்சிக்கலுக்குச் சுயசிகிச்சை செய்ய வேண்டாம். குறிப்பாக, பேதி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடும்போது பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகளை அவை பாதிக்கும்.

பிறகு, சாதாரணமாக மலம் கழிப்பதும் சிரமமாகிவிடும். ‘எனிமா’ தர வேண்டிய அவசியம் ஏற்படும். அடிக்கடி `எனிமா’ தருவதும் நல்லதல்ல. 

Related Post