ethiri.com

உடல் பருமன் ஏற்படுவது ஏன்…

அதிகம் சாப்பிடுவது, அடிக்கடி சாப்பிடுவது, உடற்பயிற்சியின்மை, உடல் உழைப்பின்மை, நொறுக்குத்தீனி அதிகம் எடுப்பது, ஹார்மோன்கள் சமநிலை மாற்றங்கள் ஆகிய காரணங்களால் உடல் எடை கூடும்.

உடல் பருமன் ஏற்படுவது ஏன்?
நவீன உலகம் மெலிந்த உடல்வாகுடன் இருப்பதையே பூரண லட்சணமாக கொண்டாடுகின்றது. இதற்கு மேல் சிறிது எடை கூடினாலே, அதிக உடற்பருமன் வந்து விட்டதாகக் கொள்கிறது.

ethiri.com

அவரவர் உடலமைப்பை பொறுத்தே அவரவர் உடல் எடை இருக்க வேண்டும். செயற்கையாக ஒருவர் மெலிந்த தேகத்துடன் இருக்க முயல்வது உடல் ஆரோக்கியத்துக்கு எதிரானது. வாதத்தைத்தூண்டும், மன உளைச்சலை உண்டாக்கும்.

அதிக எடை என்பது சராசரியாக ஒருவர் இருக்க வேண்டிய எடையை விட 20 சதவீதம் அதிகமாக இருப்பது, இந்த எடை ஒருவரது பிரகிருதியின் தன்மைக்கு ஏற்ப அல்லாமல், மிக அதிகமாக இருந்து, நீரழிவு, வாதம், உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களையும் தந்திருக்குமேயானால் அது வியாதி ஆகும்.

ஆயுர்வேதப்படி மெலிந்திருப்பது, குண்டாக இருப்பதை விட நல்லது, மெலிந்திருப்பவர்கள் குண்டாவது எளிது. ஆனால் குண்டாக இருப்பவர்கள் மெலிவது மிகக்கடினம். குண்டாக இருக்கும் உடல், நச்சுகள் சேர்ந்து நோய் வளர ஏதுவான களம் ஆகிவிடும்.

அதிகம் சாப்பிடுவது, அடிக்கடி சாப்பிடுவது, அதிக ஹெவி ஆன உணவு அதிகம் உண்பது, அதிக தூக்கம், உடற்பயிற்சியின்மை, உடல் உழைப்பின்மை, நொறுக்குத்தீனி அதிகம் எடுப்பது, மன அழுத்தம், ஹார்மோன்கள் சமநிலை மாற்றங்கள் ஆகிய காரணங்களால் உடல் எடை கூடும்.

தன்னைப்பற்றிய அக்கறை இல்லாதது, சுயமரியாதைக் குறைவாக தன்னைத்தானே நினைப்பது ஆகிய மனநிலைகளாலும் பாதுகாப்பு குறித்த பயம் காரணமாகவும் கூட அதிகஎடை கூடலாம். கபப்பிரகிருதி உடையவர்கள் எளிதில் எடை கூடுவர். இவர்களுக்கு ‘அக்னி’ குறைவாக இருக்கும், வளர்சிதை மாற்றங்கள் குறைவாக / மெதுவாக நடக்கும்.

உடலில் அதிகப்படியான கொழுப்புச்சத்து சேர்ந்து தங்குவதே உடல் எடை கூடி பருமனாக ஆகக்காரணம். பொதுவாக சாதாரண எடை கொண்டவர்களுக்கு வயிறு, பிட்டம், மார்பு ஆகிய பகுதிகளில் கொழுப்புச்சத்து அதிகம் இருக்கும். நாம் உண்ணும் உணவிலிருக்கும் நெய், வெண்ணெய் போன்றவற்றிலிருந்து கொழுப்பு சத்து கிடைக்கிறது. ட்ரைகிளிசரைடு ஒரு வகை (கார்போஹைட்ரேட்) அதிகமானாலும் அது கொழுப்பாக மாறும்.

மூளையின் பெரும் பகுதி தசைகளின் சில பகுதிகள், நரம்புகளின் பைபர் பகுதிகள் கொழுப்பால் ஆனவை. மூட்டுக்களின் இடையே உராய்வதைத்தடுக்க அங்கே சேமிக்கப்படுகிறது.

இவ்வாறு பயன்பாடு போக அதிகமாக இருக்கும் போது அது கொலஸ்ட்ராலை உண்டாக்கும். ரத்த ஓட்டத்தில் கலந்து மாறுதல்களை செய்து அதிக ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். ரத்த குழாய் சுவர்களில் படிந்து விடுகிறது. கல்லீரல், இதயம், சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் மாற்றங்கள் வருகின்றன.

எந்த வேலையும் செய்ய இயலாமல் இருப்பார்கள். அதிக உணவு உண்பர், அதிகப்பழு, அதிக தூக்கம், அதிக வியர்வை, உடலிலிருந்து துர்நாற்றம் ஆகிய அறிகுறிகள் காணப்படும்.

* முதலில் எவ்வளவு எடை அதிகம் என்று கண்டு பிடிக்க வேண்டும்.

* உணவின் அளவைக் குறைக்க வேண்டும்.

* மசாலாப் பொருட்களை அதிகம் எடுக்கலாம்.

* எண்ணெய், நெய் அதிகமுள்ள, பொறித்த, மிகவும் ஹெவியான ஆன உணவுகளை ஒதுக்க வேண்டும்.

* எளிமையான மலமிளக்கி (பேதி) மருந்துகளை எடுக்கலாம்.

* குளிர்காலத்தில் எடை குறைப்பு சிகிச்சையைத் தொடங்கக்கூடாது. அது உடல் சூட்டைக்குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கும்.

* குறுகிய கால கடினமான முறைகளை விட, நீண்டகால எளிய சிகிச்சை முறை நல்லது.

கீழ்க்காணும் 5 எளிய முறைகளைப் பின்பற்றினாலே சரியான உடல் எடையைப் பெற முடியும்.

* தினமும் அதிகாலையில் 15 நிமிடம் யோகா செய்வது.

* 3 வேளை அளவான, திருப்தியான உணவை உண்பது.

* கபத்தை சீராக்கும் உணவு முறை (டயட்)யைப்பின்பற்றுவது.

* வாரத்தில் 3 நாட்கள் உடற்பயிற்சி செய்வது.

* தினசரி நடைமுறையை சரியாக பின்பற்றுவது.

இவற்றை சரியாக கடைப்பிடித்தால் சில சமயம் சிரமம் இருந்தாலும், நாளடைவில் உடலே தனக்கு தேவையானவை, தேவையற்றவை என இனங்கண்டு, நன்மைதராத இச்சைகளை விலக்கும். அப்போது அவற்றை கடைப்பிடிப்பது சுலபமாகி இயற்கையான நிகழ்வாகிவிடும்.

யோகா, உடல், மனம், ஆன்மா ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி, அது உடலை சுத்தப்படுத்தும், உடலை மசாஜ் செய்யும், சீரணத்தை ஊக்குவிக்கும், கழிவுகள் வெளியேற உதவும், மூட்டுகள், தசைகளை வலுப்படுத்தும், ரத்த ஓட்டத்தை சீராக்கும். உடலுக்கு இவ்வளவு நன்மைகளை தரும் யோகா உடலைத்தாண்டி மனம், உணர்ச்சிகள் ஆகியவற்றை சமநிலைப்படுத்தி நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி பிராணனைத்தூண்டி விடுகிறது.

காலையில் 15 நிமிடம் யோகா செய்வது, நாள் முழுவதும் சமநிலையுடன் இருந்து வெற்றி பெற வழிவகுக்கிறது. தேவையற்ற மன அழுத்தம், முறையற்ற ஆசைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, தெளிவு, உள்நோக்கிய பார்வை ஆகியன பெற உதவுகிறது.

யோகா புதிது என்றால் “சூரிய நமஸ்காரத்துடன்” தொடங்கலாம். 4 அல்லது 5 முறை என்று தொடங்கி, 10 அல்லது 12 வரை அதிகரிக்கலாம். 7, 8 முறை செய்யும் போது 15 நிமிடம் ஆகிவிட்டால் அத்துடன் நிறுத்தி விட லாம். முக்கியமான அம்சம், யோகா செய்யும் போது விழிப் புணர்வுடன் இருக்க வேண் டும். யோகா வகுப்புகளுக்கு போவது நல்லது.

உடலுழைப்பு இல்லாத அல்லது மிகவும் உடலுழைப்பு குறைந்த நிலையில் உடற்பயிற்சி மிகவும் தேவையாகிறது.

10-15 நிமிட உடற்பயிற்சி செய்யலாம். ஏற்கனவே அதைவிட அதிக நேரம் உடற்பயிற்சி செய்து கொண் டிருந்தால் அது இன்னும் நல்லது. எப்படி எப்போது உடற்பயிற்சி செய்கிறோம் என்பதும் முக்கியமானது. காலை 6 மணி, மாலை 6 மணி ஆகிய நேரங்கள் உடற்பயிற்சிக்கு உகந்தது. அந்த சமயத்தில் நமது சுற்றுச்சுழல் அதிக சக்தியையும், பலத்தையும் நமக்குத்தரும். ஆகவே இந்த நேரங்களில் உடற்பயிற்சி செய்வது நன்மை தரும். இந்த நேரத்தில் செய்ய முடியா விட்டால் நமக்கு உகந்த வேறு சமயத்தில் செய்யலாம். எதுவும் செய்யாமல் இருப்பதை விட வேறு நேரத்திலாவது செய்வது நல்லதே.

நமது சக்தியில் 50-70 சதவீதம் வரை உடற்பயிற்சிக்காக ஒதுக்கினால் போதும். உடற்பயிற்சி செய்யும் நேரம் முழுவதும் மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இது உடல் ரீதியான அழுத்தங்களை தவிர்க்கும். நமது முயற்சிக்கேற்ற பலன் உடலுக்கு கிடைக்க செய்யும். இதைப்போலவே நடைப்பயிற்சி, ஓடுதல், வேகமாக நடத்தல், மிதி வண்டி ஓட்டுதல், நீச்சல் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தும் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

இப்போது உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்ந்து தொழிற்கூடங்கள், கல்லூரிகள் போன்ற நிறுவனங்கள் தாமே முன்வந்து உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கித்தருகின்றன. உடற்பயிற்சி என அதிக நேரம் ஒதுக்க முடியாத வர்களுக்காக ஒரு புது முறையைக் கையாளு கிறார்கள். இதற்கான நேரம் குறைவு.

சிறிய துவக்கப்பகுதி ஒரு சில பயிற்சிகள், பயிற்சிகளுக்கிடையே சிறிய இடைவெளி ஓய்வுப்பகுதி என அமையும் இப்பயிற்சிகள் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகின்றன. இன்சுலின் ரெஸிஸ்டென்சை ஐக் குறைகின்றனதை கொழுப்புச்சத்தை எரிக் கின்றன. எடை குறைப்பை ஊக்குவிக்கின்றன என்று நிரூபணம் ஆகியிருக்கிறது. எவ்வாறாயினும் புதிதாக ஒன்றை தொடங்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இன்று “எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்” என்ற பாரதியின் கூற்றை தாண்டி “உலகம்” உள்ளங்கையில் சுருங்கி விட்டது. ‘ப்யூ‌ஷன்’ என்ற பெயரில் சேரக்கூடாத காம்பினே‌ஷன்களில் புதுப்புது உணவுகள் வலைத்தளத்தின் வழியே வீடுகளுக்குள் நுழைகின்றன. நட்சத்திர விடுதிகளை நாடிப்போக வேண்டாம். “ஆன்லைனில் ஆர்டர்” கொடுத்தால் போதும். எல்லாமே கேட்கவே சுகமாக இருக்கிறது, உடல் நலம் நன்றாக இருக்கும் வரை!

நமது பாரம்பரிய உணவின் காம்பினே‌ஷன் பற்றி வியக்காத உணவியலாளர்கள் இல்லை. உலகப்புகழ்பெற்ற மரபுவழிப்பட்ட உணவு முறைகள் (குஸைன்) நம்நாட்டில் ஏராளம் இருக்கின்றன. “உணவே மருந்து” என்ற அடிப்படையில் அந்தந்த சூழலுக்கு, தொழில் முறைக்கு, கிடைக்கும் பொருட்களுக்கேற்கப அமைந்தவை அவை.
 

Related Post