ethiri.com

ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் தொடர்பு: 3 கேரள வாலிபர்கள் கைது

கேரள மாநிலம் கோழிக்கோடு, கண்ணூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் சுமார் 20 பேர் திடீரென்று மாயமானார்கள். அதன் பிறகு அவர்களது உறவினர்களுக்கு மாயமானவர்களிடமிருந்து செல்போனில் தகவல்கள் மட்டும் பரிமாறப்பட்டன.

அந்த தகவலின்படி அவர்கள் சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தில் இணைந்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த தகவல் மாநில அரசு மூலம் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு தெரிவிக்கப்பட்டது.

தேசிய புலனாய்வு அமைப்பினரும் அவர்களை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் கேரளாவில் நடந்து வருகிறது.

இதற்கிடையில் கண்ணூர் மாவட்டத்தில் இருந்து மாயமாகி இருந்த அப்துல் ரசாக் (வயது 26), ரஷீத் (25), மிதிலாஜ் (24) ஆகியோர் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தியபோது, அவர்கள் சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைந்திருப்பது உறுதியானது.

இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்ணூர் திரும்பி இருப்பதாக கண்ணூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர்கள் நடமாட்டத்தை கண்காணித்து கண்ணூர் முண்டரை என்ற இடத்தில் வைத்து அப்துல் ரசாக், ரஷீத், மிதிலாஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இவர்கள் கைதானது பற்றி தேசிய புலனாய்வு அமைப்புக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல வேறு யாராவது ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் கேரளா திரும்பி உள்ளார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

Related Post