ethiri.com

தமிழ் கற்க துடிக்கும் நடிகை ஷாலினி பாண்டே

அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்திருக்கும் ஷாலினி பாண்டே, தமிழ் கற்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்திருப்பவர் ஷாலினி பாண்டே. இவர், ‘100 பிரசன்ட் காதல்’ என்ற தமிழ் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகி இருக்கிறார். இந்த படம் 4 வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘100 பிரசன்ட் லவ்’ படத்தின் ரீமேக்.

ஜி.வி.பிரகாஷ்- ஷாலினி பாண்டே நடிக்கும் ‘100 பிரசன்ட் காதல்’ படத்தை என்.ஒய், எஸ்.ஜே. என்டர்டெயின்மென்ட் தயாரிக்கின்றன. இந்த படத்தின் தொடக்க விழா பூஜை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. எம்.எம்.சந்திரமவுலி இயக்கும் இந்த படத்தில் ஜெயசித்ரா உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் நாயகி ஷாலினி பாண்டேவிடம் படம் பற்றி கேட்டபோது….

“விளையாட்டில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. எனவே, அதில் சாதனை படைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசையாக இருந்தது. ஆனால் எனது தோழிகள், ‘நீ அழகாக இருக்கிறாய் கலைத்துறைக்கு ஏன் போகக்கூடாது என்றார்கள். எனவே, நடிப்பில் கவனம் செலுத்தினேன். பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். இணைய தளத்தில் வெளியான எனது படத்தை பார்த்து சந்தீப்ரெட்டி எனக்கு தெலுங்குப்பட வாய்ப்பை கொடுத்தார்.

அந்த படம் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். தமிழ் சினிமா எனக்கு புதுசு. இப்போது தான் தமிழ் படங்கள் பார்க்க, பாடல்கள் கேட்க தொடங்கி இருக்கிறேன். தமிழ் கற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.
 

Related Post