ethiri.com

ஓ.பி.எஸ்.க்கு அதிகாரம் இல்லை இரு அணிகளுக்கிடையே தொடரும் போர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சித் தலைவி அம்மா அணியும் கடந்த மாதம் 21-ந்தேதி இணைந்தன. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவியும் அவர் அணியைச் சேர்ந்த மாபா.பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

சமீபத்தில் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் 98 சதவீத நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கட்சியை வழி நடத்துவதற்கு பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்து விட்டு, புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகளை உருவாக்கி தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

ethiri.com

ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதன் மூலம் இரு அணியைச் சேர்ந்தவர்களுக்கு பதவிகளும், பொறுப்புகளும் சரிசமமாக பிரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், உண்மையில் ஆட்சியிலும், கட்சி விவகாரங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் முழுமையான அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சை அ.தி.மு.க.வில் நீறு பூத்த நெருப்பாக இருப்பதாகவும் பேசப்படுகிறது.

இரு அணிகள் இணைந்தாலும் மேலிடத்தில் தொடங்கி அடிமட்டம் வரை இரு
தரப்பினருக்கும் இடையே பனிப்போர் நீடிப்பதாக சொல்கிறார்கள். அதை உறுதிபடுத்தும் வகையில் பல சம்பவங்களை உதாரணமாக காட்டுகிறார்கள்.

அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் உயர் பதவியில் தன்னை நிலை நிறுத்தி கொள்ள காய்களை நகர்த்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதற்காக வெளிப்படையாக டி.டி.வி.தினகரனுடன் மோதி கொண்டிருக்கிறார். இந்த சவாலுக்கிடையே அவர் ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் மிக, மிக சாதுரியமாக, மறைமுகமாக மட்டம்
தட்டி வைத்து இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இரு அணிகளும் இணைந்ததுமே துணை முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் தனது துறைகளுக்கு, தனக்குப் பிடித்த சில அதிகாரிகளை தேர்வு செய்ய விரும்பினார். ஆனால், அவரது முதல் கோரிக்கையையே எடப்பாடி அதிரடியாக நிராகரித்து விட்டார்.

அதாவது ஓ.பி.எஸ்.சின் முதல் நடவடிக்கைக்கு கூட எடப்பாடி அனுமதி கொடுக்காமல் அதிர்ச்சி வைத்தியம் அளித்ததாக சொல்கிறார்கள். அதன்பிறகு துணை முதல்வர் என்ற அந்தஸ்தில் கோப்புகளைப் பார்த்து, துறை ரீதியிலான சில முடிவுகளை ஓ.பன்னீர்செல்வம் எடுத்தார். ஆனால், அவற்றையும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

ஓ.பி.எஸ்.க்கு வழங்கப்பட்டுள்ள இலாகாக்களின் முக்கிய கொள்கை முடிவுகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமியே எடுப்பதாக ஒருதகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஓ.பன்னீர் செல்வம் தனது இலாகா தொடர்பான முடிவுகளை கூட எடுக்க முடியாத எந்த வித அதிகாரமும் இல்லாமல் வெறுமனே ‘‘சும்மா’’ இருப்பதாக கூறப்படுகிறது. முக்கிய முடிவுகள்தான் எடுக்க இயலவில்லை.

தனக்கு விசுவாசமான அதிகாரிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் முக்கிய பதவிகளையாவது பெற்றுக் கொடுப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முயற்சியில் ஈடுபட்டார். குறிப்பாக தனது தலைமையில் தனி அணி செயல்பட்ட போது தங்களுக்கு எதிராக உள்ளடி வேலை செய்து குடைச்சல் கொடுக்க சில அரசு உயர் அதிகாரிகளை வேறு இடத்துக்கு மாற்ற அவர் பரிந்துரை செய்தார்.

அந்த பரிந்துரை பட்டியலில் சில முக்கிய துறை அதிகாரிகளும், சில உயர் போலீஸ் அதிகாரிகளும் இருந்தனர். இந்த பரிந்து ரையை ஏற்றுக் கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டார். அந்த பரிந்துரை பட்டியலையே அவர் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டு விட்டாராம்.

அதற்கு காரணம் ஓ.பி.எஸ். பரிந்துரை செய்திருந்த அந்த பட்டியலில் இருந்த அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு மிக, மிக வேண்டிய அரசு உயர் அதிகாரிகளாம். மேலும் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சராக பதவி ஏற்ற நாளில் இருந்து அவருக்கு அந்த அதிகாரிகள்தான் உதவியாகவும், ஆட்சிக்கு பாதுகாப்பு அரண் போல் இருந்து வருபவர்களாம்.

அத்தகைய அதிகாரிகளை ஒரு போதும் இப்போதைக்கு மாற்ற இயலாது என்று எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த உயர் போலீஸ் அதிகாரிகளில் 2 பேர் மீது ஓ.பன்னீர்செல்வம் மிகவும் அதிருப்தியில் இருந்தாராம். ஆனால் அவர்களை விட்டுக் கொடுக்க எடப்பாடி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த அணுகுமுறை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள். இப்போதைக்கு ஓ.பன்னீர் செல்வம் பெயரளவுக்குத்தான் துணை முதலமைச்சராக இருப்பதாக தெரிகிறது.

அதுபோல கட்சியிலும் அவரால் முக்கிய முடிவுகளை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த முடியவில்லையாம். அதற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிவாளம் போட்டு வைத்து இருப்பதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்சியிலும், கட்சியிலும் தனது கையே ஓங்கி இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்படி அதிரடியாக செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள். எடப்பாடியின் இந்த செயல்பாடு ஓ.பி.எஸ்.க்கும் அவர் ஆதரவாளர்களுக்கும் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. என்றாலும் வேறு எந்த புரட்சியும் இப்போதைக்கு செய்ய
இயலாது என்பதால் ஓ.பன்னீர்செல்வம் மவுனமாக இருந்து வருகிறார்.

உரிய நேரம் வரும் போது தனது எதிர்ப்பை காட்டலாம் என்ற முடிவுடன் ஓ.பி.எஸ். அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் ஆதரவாளர்களால் அப்படி பொறுமையாக இருக்க இயலவில்லை. ஆட்சியிலும், கட்சியிலும் முக்கிய பதவிகளைப் பெற்றுத் தாருங்கள் என்று அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தினம், தினம் நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறார்கள்.

இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் நெருக்கடியாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி அணிக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பனிப்போர் பற்றி ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி அணியுடன் நாங்கள் சேர்ந்தது மிகப்பெரிய தவறாகும். எங்களுக்கு இதுவரை எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து இருப்பதாக சொல்லலாம். ஆனால், அதற்கான எந்த அதிகாரமும் முறையாக கிடைக்கவில்லை.

எங்கள் அணியைச் சேர்ந்த மா.பா.பாண்டியராஜனை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவருக்கு முக்கியத்துவம் இல்லாத ஒரு இலாகாவை பெயருக்கு கொடுத்து இருக்கிறார்கள். கே.பி.முனுசாமிக்கு துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை கொடுத்துள்ளனர். மற்றபடி ஓ.பி.எஸ். அணியில் உள்ள எந்த ஒரு மூத்த நிர்வாகிக்கும் எந்த
பதவியும் இதுவரை வழங்கப்படவில்லை.

என்று கூறினார்.

ஓ.பி.எஸ். அணியின் பலமே கிளைக்கழக நிர்வாகிகளும் தொண்டர்களும்தான். இன்று அவர்களது நிலை திரிசங்கு சொர்க்கமாக உள்ளது. யாருக்கும் முக்கியத்துவம் கிடைக்கவில்லை.

இணைப்பு பேச்சு நடந்த போதே முக்கிய பதவிகள், பொறுப்புகளுக்கு எடப்பாடி பழனிசாமி தனது அணியைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாநில அளவில் முக்கிய பதவிகள் எதிலும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஓ.பி.எஸ். அணியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எந்த வித பதவிகளிலும் இல்லாமல் உள்ளனர். அவர்களது பங்களிப்பு ஆட்சியிலும் இல்லை கட்சியிலும் இல்லை. இது ஓ.பி.எஸ். ஆதரவாளர்களில் ஒரு சாராரிடம் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.வை வழி நடத்தி செல்ல 15 பேர் கொண்ட குழு அமைக்க முடிவு செய்துள்ளனர். இந்த குழுவில் கணிசமான இடங்களைப் பெற ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். அதற்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.

அ.தி.மு.க. கட்சிப் பெயரும் இரட்டை இலை சின்னமும் அதிகாரப்பூர்வமாக கிடைத்தபிறகு அந்த குழுவில் யார்,யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறி விட்டனர். இதனால் ஓ.பி.எஸ். அணியினர் அதை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளின் மூத்த தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் தற்போது மாவட்டம் மற்றும் கிளைக்கழகம் அளவிலும் அதிகார போட்டியாக மாறி உள்ளது. சில மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் விழாக்களின் போது நோட்டீசுகளில் பெயர்கள் போடுவதிலும் இரு அணியினரிடமும் முட்டல் மோதல் நீடிக்கிறது.

இரு அணி தலைவர்களும் டி.டி.வி.தினகரனை எதிர்த்த போது ஒரே குரலில் பேசினார்கள். டி.டி.வி.தினகரனை ஓரம் கட்ட இணைந்த கைகளாக செயல்பட்டனர். சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் வெற்றிகரமாக, திட்டமிட்டு ஓரம் கட்டியபிறகு இப்போது மீண்டும் அவர்களுக்கிடையே அதிகாரப் போட்டி உருவாகியுள்ளது. இது முறைமுகமாக நீடித்தபடி உள்ளது.

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post