ethiri.com

உண்மைகளை வெளிக்கொணர உயிரைக் கொடுத்தவர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள்

அடிப்பாங்கள், உதைப்பாங்கள், எரிப்பாங்கள், கொழுத்துவாங்கள் ஆனாலும் தொடர்ந்தும் வரும் என்றார் யோகர் சுவாமிகள் 1961 இல். யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்ட்ட போது யோகர் சுவாமிகளிடம் அருள் வாக்குப்பெறச் சென்றபோது இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். ஆம் அவருடைய அருள்வாக்கு பின்நாட்களில் பலித்துத்தான் போய்விட்டது.

உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு வீறுகொண்டெழுந்த போராட்டங்களும், அதனூடு எழுச்சி பெற்ற தமிழ்ஊடகவியலும் பின்னாளில் மிக மோசமாக அடக்கி ஒடுக்கப்படும் என்பதை அன்றே யாழ்ப்பாணத்தின் சித்தர் பரம்பரை வெளிப்படுத்திவிட்டது,

ethiri.com

அந்தவகையில் தமிழ் ஊடகவியலும், தமிழ் ஊடகவியலாளர்களும் எவ்வளவு வேகமாகவும், அறிவியல் சார்ந்தும் வளர்ச்சியுற்றார்களோ அவர்கள் அவ்வளவுக்கவ்வளவு அடக்கி ஒடுக்கி அழிக்கப்பட்டது வரலாற்று ஏடுகளில் பதிவாகிவிட்டது இப்பதிவுகளின் நினைவலைகள் இங்கே நிழலாடுகிறது. தமிழ் ஊடகவியலில் முத்திரை பதித்த யாம்பவான்களின் படுகொலைகள் எண்ணற்றுத் தொடர்ந்து கொண்டிருக்க அவர்களை நினைவு கூரும் முகமாக சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒக்ரோபர் 19 ஐ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை தினம்Tamil Journalists’ Assassination Day என பிரகடணப்படுத்தி நினைவு கூருகின்றனர்

இந்நினைவு கூரும் நாளில் தமிழ் ஊடகவியலாளர்கள் கடந்து வந்த பாதையின் அடிச்சுவடினை பின்னோக்கிப் பார்க்கலாம். இந்த ஊடகவியலாளர் படுகொலை நாள் என்பது நிமலராஜன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஒக்ரோபர் 19 ஆம் நாளையே தெரிவுசெய்யப்பட்டிருந்து. காரணம் இதற்கு முன்னர் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தாலும் கூட அவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆனால் நிமலராஜன் எந்தவொரு போராட்ட அமைப்பையும் சார்ந்திராதவர் என்ற வகையிலும், செய்தி சேகரிப்பின் போது படுகொலை செய்யப்பட்டவர் என்ற வகையிலும் அவர் கொல்லப்பட்ட ஒக்ரோபர் 19 தினத்தை அனைத்துத் தமிழ் ஊடகவியலாளர்களும் பொதுப்படையாக ~~தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நாளாக” ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழ் ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதில் ஆரம்பித்த படுகொலைப் பயிற்சியானது சிங்கள ஊடகவியலாளர்களையும் பலியெடுக்கும் வரலாற்றுப் போக்குக்கு இட்டுச்சென்றது. இந்த வகையில் குறி;ப்பாக நெருக்கடி மிகுந்த இனப்படுகொலை சூழலில் இருந்து கொண்டு தமிழ் ஊடகவியலாளராக இருந்த நிமலராஜனை பலியெடுப்பதில் பயிற்சிபெற்றுத் தேறிய படுகொலையானது சண்டே ரைம்ஸ் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை வரை நீண்டு சென்றதை நாம் காணலாம்.

தமிழ் ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்யும் பயிற்சியில் அரச சக்திகள் ஈடுபட்டிருந்த போது அதற்கு நேரடியாகவோ அன்றி மௌனத்தால் ஆதரவு வழங்கிய அந்த ஆதரவுப் பிற்புலத்திலிருந்துதான் ஏனைய ஊடகங்களுக்கு எதிரான, ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒடுக்கு முறையும் விரிவடைந்தது.
நிமலராஜன் தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர் மட்டுமல்ல தமிழை விடவும் சிங்களத்தில் பேச்சுவழக்கு, எழுத்துவழக்கு ஆகிய இரண்டிலும் பாண்டித்தியம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் நீராவியடியை சேர்ந்திருந்தாலும் குருநாகல் அவருடைய சிறுபராய வதிவிடமாகிப்போனது.

நிமலராஜன் ஒரு ஊடகவியலாளராக பணிபுரிய வேண்டும் என்ற நோக்கோடு ஊடகப்பணிக்கு வரவில்லை. மாறாக ஒரு தொழில் தேடும் படலத்தில் பத்திரிகை விநியோகஸ்தராக தன் பணியை ஆரம்பித்தார். 1986 ஆம் ஆண்டு முரசொலி பத்திரிகையின் விநியோகஸ்தராக பத்திரிகைத்துறைக்குள் நுழைந்து அதன் பின்னர் 1990 களில் ஈழநாதம் பத்திரிகை ஆரம்பித்தபோது அங்கும் பத்திரிகை விநியோகஸ்தராகவே தன்பணியைத் தொடங்கிய நிமலராஜன் தன்னுள் இயல்பாக இருந்த கிறிக்கற் விளையாட்டின் விருப்பின் காரணமாக கிறிக்கற் பற்றிய தகவல்களை வர்ணணையாக ஈழநாதத்தில் எழுத ஆரம்பிக்கின்றார். இதன்பின்னர் கல்வி வலயங்கள் மற்றும் பிற இடங்ககளில் தகவல்களை சேகரிக்க ஆரம்பித்து ஈழநாதத்தின் செய்தியாளராக பரிணமிக்கின்றார்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வரும் வரை அதாவது 1995 ஒக்ரோபர் யாழ்ப்பாணத்தில் ஈழநாதம் பத்திரிகை மூடப்படும் வரை அதில் பணியாற்றி அப்பத்திரிகை வன்னி வந்தபோது வன்னிக்கு இடம்பெயராது தொடர்ந்தும் யாழ்ப்பாணத்திலேயே இருந்து எழுத ஆரம்பிக்கின்றார். ஈழநாதத்தில் இருந்த போது ஏற்பட்ட துணிச்சலும், சிங்களப்புலமையும் இருந்ததனால் 1996 இல் பிபிசியின் சந்தேசியயும், தமிழோசையும் தமது யாழ் செய்தியாளராக நிமலராஜனை நியமிக்கின்றனர். இதுவே இவரின் கழுத்தில் வைக்கப்பட்ட கத்தியாகும். நிமலராஜன் ராவய பத்திரிகைக்கும் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தவராவார்.

யாழில் இராணுவத்தினர் செய்யும் கொடுமைகளை நிமலராஜனின் குரலில் பிபிசி சந்தேசியவில் வெளிவரத்தொடங்க இது சிங்கள மக்கள் மத்தியில் இலகுவில் சென்றடைந்தமையால் நெருக்கடிக்குள்ளான அரசு கைக்கூலிகள் மூலம் நிமலராஜனை அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்தது. தன் நெஞ்சுக்கு, உண்மைக்கு, செய்திக்கு விசுவாசமாய் செய்திகளை வழங்கியவர் நிமலராஜன் ஆவார். இது ஒரு ஊடகவியலாளனின் படிமுறை வளர்ச்சியினைக் காட்டுகிறது. இதனால் தான் இவருடைய படுகொலை நாளை ஊடகவியலாளர் படுகொலை நாளாக அறிமுகப்படுத்தியது.

ஈழத்தில் ஈழநாடு பத்திரிகை நிலையம் முதலான பத்திரிகை நிலையங்கள் அடித்து நொருக்கப்பட்டாலும் ஈழத்தில் ஊடகத்துறை சார்ந்து கொல்லப்பட்ட முதலாவது நபராக புதிய பாதை சுந்தரத்தையே குறிப்பிடலாம். இவர் சித்திரா அச்சகத்தின் முன்னர் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து 1990 களில் கே.எஸ் ராஜாவும் கொலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் ஈழத்தில் கொலைசெய்யப்பட்ட முக்கிய பத்திரிகை நபர் போராளியாக இருந்த அழகன் ஆவார். ஈழநாதம் என்கின்ற பத்திரிகையை அதன் கருத்தரிப்பிலிருந்து கட்டியெழுப்பிய சிறந்த ஊடக நிர்வாகியாக அழகன் காணப்பட்டார். அழகனைக் கண்டவர்கள், பழகியவர்கள், அழகனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் இன்றும் அழகனின் ஊடகத்துறைசார் நிர்வாகத்திறமையை வியப்புடன் கூறுவர். அழகன் நேரடியாக களங்களில் சென்று செய்தி சேகரிப்பவராகவும் இருந்தார். இவ்வாறு களத்தில் செய்தி சேகரிக்கும் போது இராணுவத்தினரின் சினைப்பர் தாக்குதலில் 1993 இல் கொல்லப்பட்டார். இவர் செய்தி சேகரிக்கும் போது கொல்லபட்டார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இதன் பின் தினமுரசு அற்புதனும் கொல்லப்பட்டார். தமிழீழத்தில் மட்டுமல்ல தமிழீழம் தவிர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈழமுரசு கஜன் பிரான்சில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்

அடுத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் வரிசையில் ஜி.நடேசன் முக்கியமானவர். மட்டக்களப்புப்பைச் சேர்ந்த ஜி.நடேசன் அவர்கள் தொடர்ச்சியாக வீரகேசரி வார இதழில் கட்டுரைகளை எழுதிவந்தார். மட்டு மண்ணிலிருந்து இராணுவ ஆக்கிரமிப்புக் கெதிராக கிளம்பிய அவரது எழுத்துக்கள் இவரைப் பலியெடுத்துவிடடடன. இவருடைய இழப்பும் தமிழ் ஊடகத்துறைக்கு ஏற்பட்ட இழப்பாகும்.

ஊடக ஜாம்பவான் டி.சிவராம் அவர்களைப் பற்றி சொல்ல நிறையவே உண்டு. ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மும்மொழிகளும் தெரிந்த ஒரு ஊடகவியலாளர் குறிப்பாக இனப்பிரச்சனை, யுத்தம், இராணுவ ஆய்வு முதலான துறைகள் சார்ந்து இலங்கையில் முத்திரை பதித்த முதலாவது எழுத்தாளராக தராக்கி அவர்களைத்தான் குறிப்பிடலாம். இவர் ஆயுதப்போராட்ட இயக்க உறுப்பினராக இருந்தவர் என்ற வகையில் தமிழர் தரப்போடு மட்டுமன்றி ஆயுதம் தாங்கிய சிங்கள இளைஞர்களோடும் உறவையும் கொண்டிருந்த இவார் இராணுவம் சம்பந்தமான ஆய்வுகளை துல்லியமாக எழுதக்கூடிய ஆற்றலும், வாய்ப்பும் இருந்தது. இவர் அனைத்து நாட்டு இராஜதந்திரிகளோடும் நல்லுறவைப் பேணினார். இந்தப்பின்னணியில் இவருக்கு நிகராக தமிழ் ஊடகத்துறையில் இதுவரை மட்டுமல்ல இனியும் யாரையும் காண்பது அரிது. இப்படிப்பட்டு ஒரு ஜாம்பவானின் படுகொலை ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல உலகம் தழுவிய ஊடகத்துறைக்கே ஒரு மாபெரும் இழப்பாகும்.

அடுத்து சுடரொளிப்பத்திரிகையின் திருகோணமலைச் செய்தியாளராக இருந்த கல்முனையைச் சேர்ந்த சுகிர்தராஜன் 2006 இல் படுகொலை செய்யப்பட்டார். இவர் 2006 தை மாதம் திருமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் படுகொலையை இராணுவம் கொலையல்ல என மறைத்தபோது அம்மாணவர்களது உடலில் காயங்கள் இருந்த படங்களை வெளிப்படுத்தில் அவை இராணுவத்தினால் செய்யப்பட்ட படுகொலை தான் என புகைப்பட ஆதாரங்களுடன் சுடரொளி பத்திரிகையில் எழுதி வெளியிட்டார். இதுவே அம்மாணவர்கள் படுகொலைக்கு ஆதாரமாக அமைந்தது. இதன்காரணமாக சுகிர்தராஜன் கொல்லப்பட்டார்.

பு.சத்தியமூர்த்தியை நோக்கில் மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் ஈழநாதம், ஈழமுரசு, ஆதாரம் சஞ்சிகை, வெளிச்சம் ஆகிய ஊடகங்களில் தொடர்ச்சியாக எழுதிவந்த இவர் உறுதியாக, நிதானமாக பரபரப்பின்றி ஊடகப்பணியை செய்தவராவார். இறுதி யுத்தத்தில் தேவிபுரத்தில் செல்வீச்சினால் கொல்லப்பட்டார்.

இதன் பின்னர் புலிகளின் குரல் வானொலியில் புகழ் பெற்றிருந்த தவபாலன் அவர்கள் அயராத உழைப்பாளி அறிவியல் ஆர்வம் உடையவர். எந்த வேளையிலும் செய்தியே தொழிலாக இருந்தார். எப்போதுமே செய்தி சேகரிப்பது, செய்தி தயாரிப்பது, செய்தியை வாசிப்பது, நேரடி வர்ணணை செய்தல் முதலாக செய்தி தொடர்பான பல்பரிமாண பக்கங்கங்களை உடையவர். முள்ளிவாய்க்கால் குரல்கள் நசிக்கப்படும் வரை தமிழர் குரலாக ஓங்கி ஒலித்தவர் தவபாலன் ஆவர் முள்ளிவாய்க்காலில் கொலை செய்யப்பட்டார். இவர்போல் ஊடகத்துறையில் பணியாற்றிய பல ஊடகவியலாளர்களின் குரல்கள் முள்ளிவாய்காலுடன் நசுக்கப்பட்டன.

ஆண் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல ரேலங்கி செல்வராஜா, இசைப்பிரியா, சுபாஜினி முதலான பெண் ஊடகவியலாளர்களும் கொலை செய்யப்பட்டனர். குறிப்பாக 2000 ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரை 43 தமிழ் ஊடகவியலாளர்களை ஈழத்தமிழ் ஊடகத்துறை இழந்துள்ளது என்பது ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

இலங்கையில் இனப்பிரச்சனை ஊடகவியலாளர்களின் கண்களைக் கட்டித்தான் முடிவடைந்தது. இறுதிக்கட்ட யுத்தத்தில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் அரசின் ஊடகத்தின் மீதான இரும்புப்பிடி இராணுவத்தின் இரும்புச் சப்பாத்தின்கீழ் கொண்டுவரப்பட்டிருந்து. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை ஊடகவியலாளர்களாகிய நாம் ஒருபோதும் நினைவுகூரத் தவறக்கூடாது. ஊடகங்களுக்கிடையிலும், ஊடகவியலாளர்களுக்கிடையிலும் அவ்வப்போது எழும் அதிகாரப் போட்டிகளும், ஊடகப்போட்டிகளும் மென்மேலும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளை ஊக்கிவிக்காது பாதுகாத்துக்கொள்வது நம் கடமையாகும்.

அ.மயூரன்

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post