அமெரிக்கா நகரங்கள் மீதான தாக்குதலை இராணுவ தளபதிகளுடன் ஆராய்ந்த வடகொரியா தலைவர்

அமெரிக்கா நகரங்கள் மீதான தாக்குதலை இராணுவ தளபதிகளுடன் ஆராய்ந்த வடகொரியா தலைவர்

அமெரிக்காவின் குவாம் தீவின் மீதான ஏவுகணை தாக்குதல் திட்டம் பற்றி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆய்வு செய்தார். டிரம்ப் நடவடிக்கைக்காக காத்திருக்க அவர் முடிவு செய்துள்ளார்.

வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள், ஏவுகணை திட்டங்கள் அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அமெரிக்க நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க 2 ஏவுகணைகளை வடகொரியா அடுத்தடுத்து சோதித்தது. இது அமெரிக்காவின் பொறுமையை சோதிப்பதாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து அமெரிக்காவின் முயற்சியால் வடகொரியா நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, ஈயம், மீன், கடல் உணவுகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிரடி தடை விதித்தது. இந்த புதிய பொருளாதார தடையினால், வடகொரியா 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 ஆயிரத்து 500 கோடி) வருவாய் இழக்கும் நிலை உருவானது.

இது வடகொரியாவுக்கு அமெரிக்கா மீது மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் குவாம் தீவின் மீது 4 ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தப்போவதாக வட கொரியா அதிரடியாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை யுத்தம் நடந்து வருகிறது.

குவாம் தீவின் மீதான தாக்குதல் திட்டம், ஆகஸ்டு மாத மத்தியில் இறுதி வடிவம் பெறும் என வடகொரிய தகவல்கள் கூறின.

ஆனால், வடகொரியா அப்படி ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க போர்த்தளவாடங்களும், ஆயுதங்களும் லோடு ஏற்றப்பட்டு விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டினார்.

இந்த நிலையில் குவாம் தீவின்மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தின் இறுதி வடிவம் குறித்து, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அவரிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து வடகொரிய அரசின் ஊடகமான கே.சி.என்.ஏ., “குவாம் தீவின்மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை கிம் ஜாங் அன் நீண்ட நேரம் ஆய்வு செய்தார். இது குறித்து அவர் தளபதிகளிடம் விவாதித்தார். அதே நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நடவடிக்கையை பொறுத்திருந்து கவனிக்கிற வகையில், தாக்குதல் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து காத்திருக்க முடிவு செய்துள்ளார்” என கூறுகிறது.

இதுபற்றி கிம் ஜாங் அன் கூறுகையில், “பதற்றத்தை தணிக்கிற வகையிலும், கொரிய தீபகற்பத்தில் ஆபத்தான ராணுவ மோதல்களை தடுக்கிற வகையிலும், அமெரிக்கா முதலில் சரியான ஒரு அணுகுமுறையை உருவாக்கி, அதை நடவடிக்கை மூலம் காட்ட வேண்டும்” என்று தெரிவித்ததாக கே.சி.என்.ஏ., கூறுகிறது.

வடகொரியா மீதான முறைகேடான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அமெரிக்கா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கிம் ஜாங் அன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே வடகொரியாவில் இருந்து நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, கடல் உணவுகள் இறக்குமதி செய்வதை சீனா நிறுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள பொருளாதார தடையைப் பின்பற்றி சீனா, இந்த நடவடிக்கையை எடுப்பதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

வடகொரியாவின் ஏற்றுமதியில் 90 சதவீதம், சீனாவுக்குத்தான் செய்யப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post

Wordpress content guard plugin by JaspreetChahal.org