ethiri.com

மிரட்டும் சீனாவை அடக்குவோம் இந்தியா பதிலடி

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து உள்ளன.

இந்திய படைகளை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தி வரும் சீனா, அங்கு போர் தொடுக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதனால் சிக்கிம் எல்லையில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.

ஆனால் அண்டை நாடுகள் அளிக்கும் எவ்வித சவாலையும் சந்திக்க போதுமான வலிமை இந்திய படைகளுக்கு இருப்பதாக ராணுவ மந்திரி அருண் ஜெட்லி மீண்டும் உறுதிபட தெரிவித்தார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கப்பட்டதன் 75-வது நினைவு தினத்தையொட்டி டெல்லி மேல்-சபையில் நேற்று நடந்த சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அவர் கூறியதாவது:-

சமீபத்திய ஆண்டுகளில் நாடு ஏராளமான சவால்களை சந்தித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சவால் மூலமும் நாடு மிகவும் வலிமையானதாக மாறி வருவதை நம்மால் பெருமையாக கூற முடியும்.

கடந்த 1962-ம் ஆண்டில் சீனாவுடன் ஏற்பட்ட போர் மூலம் இந்தியா ஏராளமான பாடம் படித்துள்ளது. ஆயுதப்படைகள் முழு பலத்துடன் இருக்க வேண்டும் என்பதே அது. ஏனெனில் தற்போது கூட நமது அண்டை நாடுகளால் பல்வேறு சவால்களை நாடு எதிர்கொண்டு வருகிறது.

1962-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 1965 மற்றும் 1971-ம் ஆண்டு போர்களில் நமது படைகள் அதிக பலம் பெற்று இருந்தன. 1962-ம் ஆண்டு போரில் நாம் பல்வேறு துன்பங்களை பெற்றிருந்தாலும், பாகிஸ்தானுடனான 1965 மற்றும் 1971-ம் ஆண்டு போர்களில் நாம் வெற்றி பெற்றோம்.

ஆனால் தற்போதும் சில சவால்கள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை சிலர் குறிவைத்துள்ளனர். ஆனால் மேற்கு எல்லையோ அல்லது கிழக்கு எல்லையோ, எந்த பகுதியில் இருந்தும் வரும் சவால்களை எதிர்கொண்டு நாட்டை பாதுகாக்க நமது தீரமிக்க வீரர்களுக்கு போதுமான வலிமை உண்டு என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். நாட்டின் பாதுகாப்புக்காக எவ்வித தியாகத்தையும் மேற்கொள்ள நமது ஆயுதப்படைகளால் முடியும்.

சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலத்தில் நாம் ஒரு நெருக்கடியை சந்தித்தோம். நமது அண்டை நாடு ஒன்று (பாகிஸ்தான்) காஷ்மீர் மீது ஒரு கண் வைத்திருக்கிறது. நமது நாட்டின் ஒரு பகுதி (ஆக்கிரமிப்பு காஷ்மீர்) பிரித்து எடுக்கப்பட்டதை தற்போது கூட நம்மால் மறக்க முடியாது. அதை எப்படி திரும்ப பெறுவது என்பதே ஒவ்வொரு இந்தியரின் நோக்கமாக இருக்கிறது.

தீவிரவாதம் மற்றும் இடதுசாரி பிரிவினைவாதத்தால் நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. எல்லைக்கு அப்பால் உள்ள சிலரும், இந்தியாவில் உள்ள சிலரும் கையில் ஆயுதங்களை ஏந்தி நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் தீவிரவாதத்தை பரப்பி வருகின்றனர்.

இதற்கு எதிராக ராணுவம், சி.ஆர்.பி.எப். மற்றும் காஷ்மீர் போலீசார் உள்ளிட்ட நமது பாதுகாப்பு படையினர் ஏராளமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எனினும் தற்போதும் சில இடங்களில் இத்தகைய தீவிரவாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எனவே தீவிரவாதத்துக்கு எதிராக இந்த சபையும், ஒட்டுமொத்த நாடும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post