ethiri.com

ஓட்டுப்பதிவு விவரத்தை உடனே அறிய புதிய தொழில்நுட்ப வசதி

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பதிவாகும் ஓட்டு விவரத்தை உடனே தெரிந்துகொள்ள புதிய தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

இதுகுறித்து நிருபர்களுக்கு ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:-

தேர்தல் நடக்கவுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் பாதுகாப்பு பணிக்காக 12 துணை ராணுவப்படை வருகிறது. ஒவ்வொரு கம்பெனியிலும் 72 முதல் 80 வீரர்கள் இருப்பார்கள்.

அவற்றில், 3 கம்பெனிகள், மத்திய ரிசர்வ் போலீஸ் படையாகும். இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை 2 கம்பெனிகளும், மத்திய தொழில் பாதுகாப்பு படை 5 கம்பெனிகளும், தெலுங்கானா ஆயுதப்படை 2 கம்பெனிகளும் அதில் அடங்கும். இந்த துணை ராணுவத்தினர், 8 மற்றும் 9-ந் தேதிக்குள் (நாளை மற்றும் நாளை மறுநாள்) வருகை தந்து, அந்தந்த தொகுதிக்கு செல்வார்கள்.

3 தொகுதிகளிலும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு பணமோ, பரிசு பொருளோ கொடுத்ததாக இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை.

தஞ்சாவூரில் ரூ.70.22 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் இதுவரை விடுவிக்கப்படவில்லை. திருப்பரங்குன்றத்தில் இதுவரை ரூ.88 லட்சத்து 19 ஆயிரத்து 190 ரொக்கப்பணம், 43 ஆயிரத்து 200 மில்லிலிட்டர் மதுபானம், 41 கிலோ வெள்ளி, 3.25 கிலோ தங்கம் ஆகிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு ரூ.12 லட்சத்து 19 ஆயிரத்து 950 தொகைக்கான ஆதாரம் காட்டப்பட்டதால் அதை விடுவித்துவிட்டோம். மீதமுள்ள தொகையும், பொருட்களும் தேர்தல் அதிகாரிகள் வசம் உள்ளது.

இந்த மூன்று தொகுதி தேர்தலிலும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த இருக்கிறோம். வாக்கு பதிவு சதவீதத்தை உடனே தெரிந்துகொள்வதற்காக மேம்படுத்தப்பட்ட ஐ.வி.ஆர்.எஸ். என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

அதன்படி, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஒரே நேரத்தில் கணினி வழியே அழைப்புவிடப்படும். அவர்கள் அதற்கான பதிலை செல்போன் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். எனவே, வாக்கு பதிவு சதவீதத்தை உடனே தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் உள்ளவர்கள் அறிந்துகொள்ள முடியும்.

இரண்டாவதாக, வேட்பாளர்கள் தனித்தனியாக வாங்கிய ஓட்டு சதவீதத்தையும் தொழில்நுட்ப முறையில் அறிய வழிவகை செய்யப் பட்டுள்ளது. டெபாசிட் தொகையை திரும்பப்பெற எந்தெந்த வேட்பாளர்களுக்கு தகுதி உண்டு என்பதை இதன்மூலம் உடனே துல்லியமாகவும் கணக்கிட முடியும்.

திருப்பரங்குன்றத்தில் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி விசாரிக்க மதுரை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான வீரராகவ ராவ் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இந்த தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக 2 நாட்களில் டெல்லி செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Post